விடுதலைப் புலிகளை விட ஜே.வி.பி யினர் மோசமானவர்கள்

விடுதலைப் புலிகளை விட ஜே.வி.பி யினர் மோசமானவர்கள்

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தை விட ஜே.வி.பியினர் மிகவும் மோசமானவர்கள் என ஸ்ரீலங்காவின் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச குற்றம்சாட்டியுள்ளார்.

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தினர் ஒருபோதும் செய்யாத செயலான ஸ்ரீலங்கா இராணுவம் உட்பட அரச படையினரின் குடும்ப உறுப்பினர்களை ஜே.வி.பி யினர் படுகொலை செய்ததாகவும் மஹிந்த ராஜபக்ச குறிப்பிட்டுள்ளார்.

ஜே.வி.பி யினரையும், நாட்டின் பிரதான எதிர்கட்சியான இரா.சம்பந்தன் தலைமையிலான தமிழ் தேசியக் கூட்டமைப்பினரையும் கடுமையாக சாடி வெளியிட்டுள்ள அறிக்கையொன்றிலேயே மஹிந்த இதனை தெரிவித்துள்ளார்.

விடுதலைப் புலிகளை விட ஜே.வி.பி யினர் மோசமானவர்கள்

ஸ்ரீலங்காவில் தற்போது நல்லாட்சி அரசாங்கமொன்று ஆட்சியில் இருப்பது போல் நல்லாட்சிக்கான எதிர்கட்சியொன்றும் இருப்பதாக மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

அதேபோல் மக்களுக்காக குரல்கொடுப்பதாக பெருமிதம் வெளியிட்டுவரும் ஜே.வி.பி யினரும் அரசாங்கத்தின் புதிய தேர்தல் முறைமைக்கு ஆதரவாக மக்கள் மத்தியில் பிரசாரம் செய்துள்ளதாகவும் மஹிந்த குற்றம்சாட்டியுள்ளார்.

மறுமுனையில் ஜனாதிபதியின் பதவிக் காலத்தை ஐந்து வருடங்களில் இருந்து ஆறு வருடங்களாக அதிகரித்துக்கொள்ள முயற்சிகள் மேற்கொள்ளப்பட்ட போது நாட்டின் பிரதான எதிர்கட்சியான தமிழ் தேசியக் கூட்டமைப்பும் மற்றுமொரு எதிர்கட்சியான ஜே.வி.பி யும் அதற்கு எதிராக குரல்கொடுக்காதது மாத்திரமன்றி உச்ச நீதிமன்றிலும் முன்னலையாகாது இருந்ததன் மூலம் அவர்களும் நல்லாட்சி அரசாங்கத்திற்கு பகிரங்கமாக துணைபோகின்றார்கள் என்பதை நிரூபித்துள்ளதாகவும் மஹிந்த குறிப்பிட்டுள்ளார்.

2015 ஆம் ஆண்டும் ஓகஸ்ட் மாதம் நடைபெற்ற பொதுத் தேர்தலின் பின்னர் ஐக்கிய தேசியக் கட்சியின் சபாநாயகர் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஐம்பது பேரைக் கொண்டிருக்கும் கூட்டு எதிர்கட்சியினரை பிரதான எதிர்கட்சியாக அங்கீகரிக்காது அவரும் 16 நாடாளுமன்ற உறுப்பினர்களைக் கொண்டிருந்த தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்கு எதிர்கட்சித் தலைவர் பதவியை வழங்கியதன் மூலம் இதனை வெற்றிகரமாக நிறைவேற்றியிருப்பதாகவும் மஹிந்த சுட்டிக்காட்டியுள்ளார்.

நல்லாட்சி அரசாங்கத்தின் மக்கள் விரோத நடவடிக்கைகளுக்கு எதிராக நாடாளுமன்றில் தொடர்ச்சியாக எதிர்ப்பை வெளிப்படுத்திவரும் கூட்டு எதிர்கட்சியினரை நாட்டின் பிரதான எதிர்கட்சியாக அங்கீகரிக்காது தமக்கு சார்பான ஜே.வி.பி மற்றும் தமிழ் தேசியக் கூட்டமைப்பினரை அங்கீகரித்து ஜனநாயகத்தின் அடிப்படை மரபுகளையே குழிதோண்டி புதைத்துவிட்டதாகவும் மஹிந்த குற்றம்சாட்டியுள்ளார்.

நல்லாட்சி அரசாங்கம் ஆட்சிபீடம்ஏறிய நாள் முதல் ஜே.வி.பி யினருக்கு முன்னுரிமை கொடுத்து வருவதாகவும் தெரிவித்துள்ள மஹிந்த அதனாலேயே ஜே.வி.பி யினர் அரசாங்கத்தின் நடவடிக்கைகள் அனைத்தையும் நியாயப்படுத்தி வருவதாகவும் கூறியுள்ளார்.

நாட்டின் ஆட்சியை முழுமையாக குழப்பி அதன்மூலம் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றுவதே 1971 ஆம் ஆண்டு முதல் ஜே.வி.பி யினரின் நோக்கமாக இருந்து வந்துள்ளதாகவும் மஹிந்த குறிப்பிட்டுள்ளார்.

1971 ஆம் ஆண்டு அப்போதைய ஆட்சியை கவிழ்த்து ஆட்சியை பிடிக்க முற்பட்டதன் மூலம் ஜே.வி.பி யினர் 10 ஆயிரத்திற்கும் அதிகமான இளைஞர்களை பலிகொடுத்தததுடன் 1987 ஆம் ஆண்டு முதல் 89 ஆம் ஆண்டுவரையான காலப்பகுதியில் இடம்பெற்ற ஆயுதப் போராட்டத்தின் போது 60 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இளைஞர்களை பலிகொடுத்துள்ளதாகவும் மஹிந்த குறிப்பிட்டுள்ளார்.

அதேபோல் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிராக 1988 ஆம் ஆண்டு ஒட்டுமொத்த இராணுவமும் வடமராட்சி படை நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த போது தெற்கில் ஜே.வி.பி யினர் இராணுவம் உட்பட அரச படையினரை தொடர்ச்சியாக கொன்றதுடன் அவர்களது குடும்ப உறுப்பினர்களையும் கொடூரமாக படுகொலை செய்ததாகவும் மஹிந்த சுட்டிக்காட்டியுள்ளார்.

இவ்வாறான கொடூரங்களில் தமிழீழ விடுதலைப் புலிகள் ஒருபோதும் ஈடுபடவில்லை என்றும் சுட்டிக்காட்டியுள்ள மஹிந்த ராஜபக்ச நாட்டிற்கும் படையினருக்கும் எதிராக மிகவும் மோசமான கொடூரங்களை கட்டவிழ்த்துவிட்டு நாட்டிற்கு பாரிய துரோகத்தை இழைத்தவர்கள் ஜே.வி.பி யினர் என்பதை மறந்துவிடலாகாது என்றும் தெரிவித்துள்ளார்.