விடுதலைப்புலிகளின் பணத்தைக் கொள்ளையடித்து சுவிஸில் வைப்புச் செய்துள்ள பிள்ளையான்

விடுதலைப்புலிகளின் பணத்தைக் கொள்ளையடித்து சுவிஸில் வைப்புச் செய்துள்ள பிள்ளையான்

தமிழர்கள் சகல உரிமையுடனும் வாழவேண்டும் என்பதற்காக ஆயுதம் தூக்கி போராடியவர்களின் நோக்கத்தினை நிறைவேற்ற வேண்டும் என்பதற்காக தொடர்ச்சியான முயற்சியை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மேற்கொண்டு வருவதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

நேற்று மாலை மட்டக்களப்பு மாநகரசபைக்குட்பட்ட பகுதியில் இடம்பெற்ற தேர்தல் பரப்புரைக்கூட்டத்தில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும்பொதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

இங்கு அவர் தொடர்ந்தும் கருத்துத் தெரிவிக்கையில்,

 

7 கோடி ரூபாவில் மட்டக்களப்பு பஸ் நிலையத்தினை கட்டிவிட்டு 40 அடியில் கட்டவுட் வைத்தார் பிள்ளையான். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு குறுகிய காலத்தில் கிழக்கு மாகாணசபையில் ஆட்சிசெய்தபோது கிழக்கு மாகாண விவசாய அமைச்சர் 12 கோடி ரூபாவில் பெரிய விவசாய பண்ணையினை கட்டியுள்ளார்.

கிழக்கு மாகாண முதலமைச்சராக பிள்ளையான் இருந்தபோது பிரதேசசபை மற்றும் மட்டக்களப்பு மாநகரசபையினை அவர்கள்தான் ஆட்சிசெய்தார்கள். மகிந்த ராஜபக்ஸவின் கைக்கூலியாக இருந்து அவர்களின் சின்னத்திலேயே போட்டியிட்டனர்.

2008ஆம் ஆண்டு பிள்ளையான் முதலமைச்சராக ஆக்கப்பட்ட நிலையில், 2009ஆம் ஆண்டு போர் மௌனிக்கப்பட்ட நிலையில் அபிவிருத்தியடையாத பகுதியாக வடக்கு, கிழக்கு பகுதி காணப்பட்டதன் காரணமாக அப்பகுதியை அபிவிருத்தி செய்வதற்காக கோடிக்கணக்கான ரூபா பணம் மகிந்த ராஜபக்ஸவுக்கு சர்வதேச நாடுகளினால் வழங்கப்பட்டது.

 

இலவசமாக வழங்கப்பட்ட பணம் எல்லாம் தென் பகுதி அபிவிருத்திக்கு வழங்கப்பட்டது. கடனாக வழங்கப்பட்ட நிதிகளில் பெரும்பாலானவை வடக்கு, கிழக்கிற்கு வழங்கப்பட்டது.

பிள்ளையானுக்கு வழங்கப்பட்ட நிதிகளை சரியாக கையாண்டிருந்தால் பல அபிவிருத்தி திட்டங்கள் நடைபெற்றிருக்கும்.

வாகனம் தரவில்லையென்பதற்காக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் நாடாளுமன்ற உறுப்பினராக வந்ததாக அண்மையில் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் பொதுச்செயலாளர் பிரசாந்தன் கூறியிருக்கின்றார்.

2010ஆம் ஆண்டு ஆரம்பத்தில் இருந்து உலக சைவ மாநாட்டுக்காக நான் இந்தியா சென்றிருந்தேன். நான் இந்தியாவில் இருந்தபோது என்னை முதன்முறையாக அரசியலுக்கு அழைத்தவர்கள் இந்த தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியை சேர்ந்தவர்கள்தான்.

 

நான் அந்தவேளையில் அரசியலுக்கு வரமாட்டேன் என்று மறுத்தேன். அவர்களது கட்சியைப்பற்றியும் அவர்களின் அட்டூழியங்களை பற்றியும் அறிந்தவன் என்ற வகையிலும் கடத்தலிலும் கப்பம் வாங்குவதிலும் கொலை செய்வதிலும் பெயர்பெற்றவர்கள் அந்த கட்சியில் இருக்கின்றார்கள் என்ற வகையிலும் அந்த கட்சிக்கு பின்னால் போகக்கூடாது என்பதற்காக நான் மறுத்தேன்.

அப்பட்டமான பொய்யை தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் பொதுச்செயலாளர் வெளியிடுகின்றார். அவருக்கு அரசியல் ஞானம் துப்பரவாக இல்லை.

கரடியாறில் இருந்து விடுதலைப் புலிகளின் வைப்பகத்தில் இருந்த பெருமளவான பணமும், நகைகளும் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியை சேர்ந்தவர்களினால் கொள்ளையிடப்பட்டு சுவிஸ் நாட்டில் பிள்ளையானால் பெரிய நகைமாளிகை திறக்கப்பட்டுள்ளது.

 

பலரின் பெயரில் சுவிஸ் வங்கிகளில் பணம் வைப்பிலிடப்பட்டுள்ளது. அவர் முதலமைச்சராக இருந்தபோது மட்டக்களப்பு மாவட்டத்தில் பல வீடுகளில் கொள்ளைகளும் நடத்தப்பட்டன. இது தொடர்பில் பொலிஸில் முறைப்பாடுசெய்யவும் பயந்த நிலையிலேயே இருந்துவந்தனர். இவ்வாறான சூழ்நிலையிலேயே தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி ஆட்சியை நடத்தியது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினை சேர்ந்தவர்கள் சிறையில் இருப்பவர்கள் தொடர்பிலும் காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பிலும் எந்தவித நடவடிக்கையும் எடுப்பதில்லையென தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் பொதுச்செயலாளர் கூறுகின்றார்.

நீங்கள் காணாமல் ஆக்க நாங்கள் எதுவும் செய்யவில்லையென்று கூறுவது சரியா என நான் அவரிடம் கேட்கவிரும்புகின்றேன். பலரை காணாமல் ஆக்கியவர்கள்தான் இந்த தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியினர். அதற்கு தீவுச்சேனை என்னும் கிராமம் பதில் கூறும்.

 

இந்த நாட்டில் யுத்தத்தினால் பல்லாயிரக்கணக்கான உயிர்களை இழந்துள்ளதுடன் ஆயிரக்கணக்கான மாவீரர்களையும் கொண்டுள்ளோம். இவையெல்லாம் வெறும் வீதிக்காகவும் அபிவிருத்திக்காகவும் இழந்த இழப்பு அல்ல.

நாங்கள் இந்த நாட்டின் தேசிய இனம், பூர்வீக குடிகள், இந்த நாட்டில் சகல உரிமைகளையும் அனுபவிக்க வேண்டியவர்கள். இரண்டாம் தர பிரஜைகளாக தமிழர்களை வைத்திருப்பதற்கு அனுமதிக்கமுடியாது.

அதன்காரணமாகவே எமது உறவுகள் ஆயுதம் ஏந்திபோராடி பல தியாகங்களை செய்துள்ளனர். எதற்காக அவர்கள் ஆயுதம் தூக்கிப்போராடினார்களோ அந்த நோக்கத்தினை நிறைவேற்ற வேண்டும் என்பதற்காக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தொடர்ச்சியான முயற்சிகளை மேற்கொண்டுவருகின்றது. நாங்கள் அரசாங்கத்துடன் ஒட்டிக்கொண்டிருக்கவில்லை என குறிப்பிட்டுள்ளார்.