விசாரணை அறிக்கைகளை இன்று நாடாளுமன்றில் சமர்ப்பிக்க முடிவு

விசாரணை அறிக்கைகளை இன்று நாடாளுமன்றில் சமர்ப்பிக்க முடிவு

sri lanka parliamentஊழல், மோசடிகள் தொடர்பாக விசாரணைகளை நடத்திய இரண்டு ஆணைக்குழுக்களின் அறிக்கைகளும் இன்று சிறிலங்கா நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளன என்று பிரதி சபாநாயகர் திலங்க சுமதிபால தெரிவித்துள்ளார்.

மத்திய வங்கி பிணைமுறி மோசடி குறித்த விசாரணை அறிக்கையும், மகிந்த ராஜபக்ச ஆட்சிக்காலத்தில் இடம்பெற்ற மோசடிகள், ஊழல்கள் குறித்து விசாரித்த ஆணைக்குழுவின் அறிக்கையுமே இன்று நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளன.

ஏற்கனவே இந்த அறிக்கைகள், சிறிலங்கா அதிபர் செயலகத்தினால் சபாநாயகரிடம் கையளிக்கப்பட்டுள்ளதுடன், இணையத்திலும் வெளியிடப்பட்டுள்ளது.

சபாநாயகர் கரு ஜெயசூரிய தலைமையில் நேற்று நடந்த கட்சித் தலைவர்களின் கூட்டத்தில், இன்று காலை 9.30 மணியளவில் இரண்டு ஆணைக்குழுக்களின் அறிக்கைகளையும் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிப்பது என்று முடிவு செய்யப்பட்டுள்ளது.

இரண்டு அறிக்கைகள் தொடர்பாகவும்,  வெவ்வேறான இரண்டு நாட்களில் விவாதம் நடத்த அரசாங்கத் தரப்பு இணங்குவதாக அவை முதல்வர் லக்ஸ்மன் கிரியெல்ல இந்தக் கூட்டத்தில் தெரிவித்துள்ளார்.

எனினும், தேர்தலுக்கு முன்னர் இந்த விவாதத்தை நடத்த நாள் ஒதுக்க முடியாது என்றும் அவர் கூறியுள்ளார்.

அதேவேளை, கூட்டு எதிரணியின் தலைவரான தினேஸ் குணவர்த்தன, இணையத்தில் அறிக்கைகள் வெளியிடப்பட்டு விட்டதால், இந்த வார அமர்வின் போது இரண்டு நாட்களை ஒதுக்கி விவாதத்தை நடத்த வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

இறுதியாக, இன்று அறிக்கைகளை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிப்பது என்றும், இதுதொடர்பாக ஒவ்வொரு கட்சியின் தலைவருக்கும் உரையாற்ற சந்தர்ப்பம் அளிப்பது என்றும் முடிவு செய்யப்பட்டது.

நாளை மாலை கட்சித் தலைவர்களின் கூட்டத்தை மீண்டும் கூட்டி, தேர்தலுக்கு முன்னர் விவாதம் நடத்த முடியுமா என்று தீர்மானிப்பது என்றும் நேற்றைய கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.

அதேவேளை, தேர்தல் வாரத்தில் நாடாளுமன்றக் கூட்டம் இடம்பெறாது என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.