உள்ளூராட்சி தேர்தல் நெருங்கிவிட்ட நிலையில், இலங்கை அரசியல் களம் சூடு பிடிக்க ஆரம்பித்துள்ளது. வடக்கு, கிழக்கு தமிழர் தாயக பகுதிகளில் தமிழ்த் தேசிய அரசியலை முன் நகர்த்தி மூன்று முனைகளில் தீவிர போட்டி நிலை ஏற்பட்டுள்ளது.

தமிழரசு கட்சியின் கூட்டணியில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, ஈ.பி.ஆர்.எல்.எப் கூட்டணியில் தமிழர் விடுதலைக் கூட்டணி மற்றும் தமிழ்த் தேசிய மக்கள் முண்னணியின் கூட்டிலான தமிழ் மக்கள் பேரவை என அரசியல் வேட்டை தீவிரமடைந்துள்ளது.

இந்த நிலையில் வட மாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரனின் அறிக்கையும் அரசியல் களத்தை ஆட்டம் காண வைத்துள்ளது என்றால் மிகையாகாது. வடக்கு முதல்வரின் அரசியல் நகர்வு தமிழ் மக்கள் மத்தியில் ஆதரவு தளத்தை அவருக்கு உருவாக்கியுள்ளது.

இதற்கு சான்றுதான் முதல்வருக்கு எதிராக தென்னிலங்கை அரசியலில் கொண்டு வந்த நம்பிக்கை இல்லா தீர்மானம்.

நம்பிக்கையில்லா பிரேரணைக்கு எதிராக கொதித்து எழுந்த இளைஞர், யுவதிகளின் எழுச்சியையும் யாரும் மறந்து விட முடியாது.

அது மட்டும் இல்லை. அதற்கு முன்னர் வட மாகாண முதலமைச்சர் தலைமையில் இடம்பெற்ற தமிழ் மக்கள் பேரவையின் “எழுக தமிழ்” நிகழ்விலும் திரண்டு வந்த கூட்டம் தமிழ் மக்கள் முதல்வர் மீது கொண்ட நம்பிக்கையினையும் வெளிப்படுத்தி இருந்தது.

மக்கள் நம்பிக்கையின் முழு அவதாரமாக திகழ்ந்த விக்கி தாம் அங்கம் வகிக்கும் தமிழ் மக்கள் பேரவையை மக்கள் இயக்கமாக அறிவித்து அதன்படியே செயற்பட்டு வருகின்றார்.

இந்த நிலையில் உள்ளூராட்சி தேர்தலில் விக்கியின் ஆதரவு யாருக்கு என்பது ஒரு புறம் இருக்க மறுபுறம் வடக்கு, கிழக்கில் தமிழ்த் தேசிய அரசியலை மையப்படுத்தி களத்தில் குதித்துள்ள கட்சிகள் முதல்வர் தம்பக்கம் இருப்பது போல காட்ட முயல்கின்றனர்.

கிளிநொச்சியில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் தமது தேர்தல் பிரச்சார துண்டுப் பிரசுரங்களில் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தனுடன், வடக்கு முதல்வரின் புகைப்படத்தையும் இணைத்து பயன்படுத்தியிருந்தனர்.

முதல்வரின் ஆதரவு தமக்கு இருப்பது போல காட்டி ஆதரவாளரை பெறுவதற்கு முயற்சி செய்வதாகவும் அரசியல் அவதானிகளினால் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இத்தகைய சம்பவங்களை தொடர்ந்துதான் தனது புகைப்படங்களை பயன்படுத்த வேண்டாம் என்று கடிதம் மூலம் முதல்வர் தெரிவித்துள்ளதாகவும் செய்திகள் வெளிவந்திருந்தன.

அது மட்டுமல்ல, தமிழரசு கட்சியின் தேர்தல் விஞ்ஞாபனம் குறித்து தனது அதிருப்தியை ஏற்கனவே வெளிப்படுத்தியுள்ளமை கவனிக்கத்தக்கது. மறுபுறம் முதல்வரின் ஆதரவு தனக்குதான் என்று ஈ.பி.ஆர்.எல்.எப் பிரச்சார நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றது.

இதன் உச்ச கட்டமாக அண்மையில் அடுத்த வடமாகாண சபைத் தேர்தலின் போது, வடக்கின் தற்போதைய முதலமைச்சர் உதயசூரியன் சின்னத்திலேயே போட்டியிடுவார் என்று, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் கூறியுள்ளார்.

வவுனியாவில் நடைபெற்ற தேர்தல் சார்ந்த நிகழ்வொன்றில் வைத்து அவர் இந்த கருத்தை வெளியிட்டுள்ளார்.

இது கட்சிகளுக்கு இடையில் குழப்பத்தை ஏற்படுத்தியிருந்தது. இதனை தெளிவு படுத்துவதற்காக வடக்கு முதல்வர் அறிக்கை ஒன்றினை வெளியிட்டிருந்தார்.

வடக்கு,கிழக்கில் இத்தேர்தல் காலத்தில் என் பெயரை இழுத்து கட்சிகளின் சார்பிலும் தனிப்பட்ட வேட்பாளர்கள் சார்பிலும் நன்மைகளைப் பெற பலர் எத்தனிக்கின்றார்கள் என்று தெரியவருகின்றது.

எதிர்வரும் வடமாகாண சபைத் தேர்தல் பற்றி நான் எந்தவித முடிவும் எடுக்காமலேயே என்னுடைய சின்னம் பற்றி எல்லாம் கருத்துக்கள் வெளிவந்துள்ளன.

நான் இதுவரையில் எதிர்வரும் வடமாகாண சபைத் தேர்தல் பற்றியோ கட்சி, சின்னம் பற்றியோ இப்போது சிந்திக்கவில்லை.

எனது அரசியல் கொள்கைகள் கிட்டத்தட்ட தமிழ் மக்கள் பேரவையின் கொள்கைகளை ஒத்தது என்று ஏற்கனவே கூறியுள்ளேன் என்றும் அறிக்கையில் கூறியிருந்தார்.

இந்த நிலையில் தமிழ் மக்கள் பேரவையுடன் ஒத்து போகின்றவர்களுக்கு தனது ஆதரவு என்று மறைமுகமாக கூறினாலும், முதல்வர் ஒரு விடயத்தில் கடமைப்பட்டுள்ளார்.

தமிழர்களின் பொதுவான பிரச்சினைகளுக்கு மட்டுமல்லாது அவர்களுக்குள்ளேயே அடிக்கடி ஏற்படுகின்ற குழப்பங்களுக்கும் தீர்வு காண வேண்டிய பெரிய பொறுப்பும் அவரது தலையில் சுமத்தப்பட்டுள்ளது.

போர் காரணமாக பல்வேறு வகைப் பிரச்சினைகளை எதிர்நோக்கும் தமிழ் மக்கள் போர் ஓய்ந்த பின்னரும் தமிழர்களின் வாழ்வில் நிம்மதி கிடைக்கவில்லை.

போர் காரணமாக இடம்பெயர்ந்தவர்கள் காணாமல் ஆக்கப்பட்டவர்கள், அரசியல் கைதிகள், போரின் போது கொல்லப்பட்டவர்கள் என்று பலரும் பிரச்சினைகளை எதிர்கொண்டு வருகின்றனர்.

முதல்வர் மக்களுக்கு பதில் வழங்க வேண்டிய கட்டாயத்திலும் உள்ளார் என்பது மட்டும் தெளிவாக தெரிகின்றது.

பொறுத்திருந்து பார்ப்போம் விக்கியின் காய் நகர்த்தல் தமிழர் மத்தியில் எப்படியான மாற்றத்தை கொண்டு வரப்போகின்றது என்று..