மேஜர் ஜெனரல் துமிந்த கெப்பிட்டிவலன்னவுக்கு யாழ். மேல் நீதிமன்றம் அழைப்பாணை

மேஜர் ஜெனரல் துமிந்த கெப்பிட்டிவலன்னவுக்கு யாழ். மேல் நீதிமன்றம் அழைப்பாணை

Maj.general duminda keppetiwalanaநாவற்குழியில் சிறிலங்கா படையினர் 24 இளைஞர்களைக் கைது செய்து காணாமல் ஆக்கிய  சம்பவங்கள் தொடர்பாக தொடரப்பட்டுள்ள ஆட்கொணர்வு மனுக்கள் தொடர்பாக, மேஜர் ஜெனரல் துமிந்த கெப்பிட்டிவலன்னவை நீதிமன்றத்தில் முன்னிலையாகும்படி, யாழ். மேல்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

1996ஆம் ஆண்டு, நாவற்குழியில் நடத்தப்பட்ட சுற்றிவளைப்பின் போது, 24 இளைஞர்கள் கைது செய்யப்பட்டு, லெப்.கேணல் துமிந்த கெப்பிட்டிவலன்ன கட்டளை அதிகாரியாக இருந்த நாவற்குழி படைமுகாமுக்கு கொண்டு செல்லப்பட்டனர். அதன் பின்னர் அந்த இளைஞர்கள் காணாமல் ஆக்கப்பட்டனர்.

இது தொடர்பாக, 12 இளைஞர்களின் சார்பில், கடந்த நொவம்பர் மாதம் 9ஆம் நாள் யாழ்.மேல் நீதிமன்றில் உறவினர்களால் ஆட்கொணர்வு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

இந்த 12 பேரில், 9 பேர் கடந்த 2002 ஆம் ஆண்டு யாழ்.மேல் நீதிமன்றில் ஆட்கொணர்வு மனுக்களை தாக்கல் செய்திருந்தனர்.

அந்த மனுக்கள் மீதான விசாரணையை யாழ்ப்பாணத்தில் நடத்தக் கூடாது என அப்போதைய யாழ்.மாவட்ட இராணுவத் தளபதி கொழும்பு மேல் முறையீட்டு நீதிமன்றில் 2003ஆம் ஆண்டு தாக்கல் செய்த மனுவை அடுத்து, இந்த வழக்குகள் அனுராதபுர மேல் நீதிமன்றத்துக்கு மாற்றம் செய்யப்பட்டன.

வேறொரு மேல் நீதிமன்றில் நிலுவையில் இருக்கும் வழக்குகளை, இன்னொரு மேல் நீதிமன்றில் மீள திறக்க முடியாது என்று சுட்டிக்காட்டிய யாழ்.மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன், கடந்த நொவம்பர் மாதம் 9ஆம் திகதி மனுத்தாக்கல் செய்த 12 பேரில், 9 பேரின் ஆட்கொணர்வு மனுக்களையும் தள்ளுபடி செய்திருந்தார்.

எஞ்சிய மூவரின் சார்பிலான மனுக்கள் யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றால் ஏற்றுக்கொள்ளப்பட்டு, நேற்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

இந்த வழக்கில் முதலாவது எதிரியாக துமிந்த கெப்பிட்டிவெலன்ன,  இரண்டாவது எதிரியாக இராணுவ தளபதி, மூன்றாவது எதிரியாக சட்டமா அதிபர் ஆகியோர் குறிப்பிடப்பட்டிருந்தனர்.

நேற்று இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது எதிர் மனுதாரர்கள் சார்பில் சட்ட மா அதிபர் திணைக்களத்தின் அரச சட்டவாளர்கள் இருவர் முன்னிலையாகினர்.

அதற்கு வழக்குத்தொடுனர் சார்பில் முன்னிலையான சட்டவாளர்கள் கடும் எதிர்ப்பை வெளியிட்டன.

அத்துடன், சம்பவம் இடம்பெற்ற காலப்பகுதியில் நாவற்குழி முகாமுக்கு பொறுப்பாகவிருந்த துமிந்த கெப்பிட்டிவெலன்ன தற்போதும் சிறிலங்கா இராணுவ சேவையில் இருப்பதாக சுட்டிக்காட்டினர்.

இதையடுத்து, முதலாம் எதிர் மனுதாரரான  இராணுவக் கட்டளை அதிகாரி மேஜர் ஜெனரல் துமிந்த கெப்பிட்டிவெலன்னவை வரும் ஏப்ரல் மாதம் 2ஆம் நாள் மன்றில் முன்னிலையாக வேண்டும்  என யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன் உத்தரவிட்டு விசாரணையை ஒத்திவைத்தார்.

மேஜர் ஜெனரல் துமிந்த கெப்பிட்டிவலன்ன தற்போது, பூநகரிப் பகுதியில் நிலைகொண்டுள்ள  66 ஆவது டிவிசனின் கட்டளை அதிகாரியாக பணியாற்றுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.