முள்ளிவாய்க்காலை நினைவுபடுத்தும் இன்னொரு சோகம்

முள்ளிவாய்க்காலை நினைவுபடுத்தும் இன்னொரு சோகம்

இந்த நூற்றாண்டின் பெரும் மனிதப் பேரவலங்களைச் சந்தித்திருக்கிறது இரு இனங்கள்.

இந்த இரண்டு இனங்களும் தர்மத்தின் வழியைப் போதித்த புத்த பெருமானின் மார்க்கத்தைப் பின்பற்றும் பௌத்தர்களால் மேற்கொள்ளப்பட்ட அடக்கு முறைக்கு உள்ளாகியிருப்பது தான் வேதனையானது.

இலங்கையில் பௌத்தம் சிங்களமும் என்று ஒருங்கே சேர்ந்து கொண்டதோ அன்றே இனச்சிக்கலும், பிரச்சினைகளும் ஆரம்பித்தன. அது மெல்லமெல்ல வளர்ந்து 2009 மே மாதத்தில் கோரத்தாண்டவம் ஆடியிருந்தது.

இலட்சக்கணக்கான உயிர்களைக் காவுகொண்டனர் பௌத்தத்தின் பெயரால். இனமும், மதமும் ஒன்று சேர்ந்து மனிதாபிமானம் என்ற போரை நடத்தி முடித்தார்கள். போர் ஆரம்பிக்கப்பட்டதன் நோக்கமும் முடிவும் ஒரு இனத்தின் அழிவாக இருந்தது.

முள்ளிவாய்க்காலில் இலட்சக் கணக்கான பொதுமக்கள் கூடியிருந்த இடத்தில் குண்டு மழை பொழிந்து கொல்லப்பட்ட போது எடுக்கப்பட்ட காட்சிகளும், புகைப்படங்களும் எப்படி பார்ப்பவர்களை நிலைகுலையச் செய்ததோ அதேபோன்று தான் இன்று ரோஹிங்கியாவில் நடக்கும் சம்பவங்களும் எடுக்கப்பட்ட படங்களும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

அதுமாத்திரமன்றி, அகதி முகாம்களுக்குள் தமிழ் மக்களை அடக்கி, அவர்களின் வாழ்க்கையைப் பறித்த போது, முள் வேலிக்குள் நின்று கொண்டு அந்தச் சிறார்கள் தமது வாழ்க்கையின் ஏக்கத்தையும், பெரும் சோகத்தையும் வெளிப்படுத்திய புகைப்படங்கள் ஏராளம் வெளியாகிருந்தன.

அதையொத்த காட்சிகள் இன்று மியன்மாரில் நடந்து கொண்டிருக்கிறது. அதேபோன்று மனிதப் புதைகுழிகள் ஈழத்து மண்ணிற்கு புதிதல்ல. கண்ணில்பட்ட தமிழர்களை கொன்று புதைத்து அவர்களை கூட்டாக புதைத்த வரலாற்றைப் பார்த்திருக்கிறோம்.

செம்மணிப் புதைகுழி ஈழத் தமிழர்களின் வாழ்வில் மறக்கமுடியாத வடு. இப்படி எத்தனையோ மனிதப் புதைகுழிகளை கண்டிருக்கிறோம்.

இதேபோன்று மியன்மாரில் ரோஹிங்கியா முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வசிக்கும் ராக்கைன் மாகாணத்தில் கண்டறியப்பட்ட புதைகுழியிலிருந்து 10 சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு இராணுவம் தெரிவித்துள்ளது.

ராக்கைன் மாகாணத்தின் வடக்குப் பகுதியில் அமைந்துள்ள இண்டிண் கிராமத்தில் இந்தப் புதைகுழி கண்டுபிடிக்கப்பட்டிருப்பதாக அந்நாட்டு இராணுவத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ராக்கைன் மாகாணத்தில் ரோஹிங்கியா பயங்கரவாதிகள் கடந்த ஆகஸ்ட் மாதம் தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து இராணுவம் நடத்திய தாக்குதலில், 6,700 பொதுமக்கள் கொல்லப்பட்டதாக சர்வதேச தன்னார்வ அமைப்புகள் குற்றம் சாட்டியிருந்தன.

இந்நிலையில் மனிதப் புதைகுழி ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளமையானது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது போன்று இன்னமும் ஏராளமான மனிதப் புதைகுழிகள் அங்கு இருக்கலாம் என்றும் அச்சம் வெளியிடப்பட்டுள்ளது.

ஆக, ஈழத்தில் நிகழ்ந்த படுகொலைகளைப் போன்று எண்ணிக்கையற்று நிகழ்ந்திருக்கிறது ரோஹிங்கியாவில். இலட்சக் கணக்கான மக்கள் இடம்பெயர்ந்து அண்டை நாடுகளிலும், சொந்த நாட்டிலும் அகதிகளாக அலைந்துகொண்டிருக்கிறார்கள்.

அவர்களின் புகைப்படங்கள் இன்னுமொரு முள்ளிவாய்க்கால் நிகழ்வை நினைவுபடுத்துவதை உணரமுடிகிறது.

எனினும் உலகநாடுகள் இந்தப் படுகொலைகளையும், இனவழிப்பையும் கண்டுகொள்ளாமல் இருப்பது வேதனையிலும் வேதனையானது.