நாமல் ராஜபக்ச றோ அமைப்பின் முகவர்? சிங்கள ஊடகம் தகவல்

நாடாளுமன்ற உறுப்பினர்களான நாமல் ராஜபக்ச மற்றும் பிரசன்ன ரணதுங்க ஆகியோர் இந்திய புலனாய்வு அமைப்பான றோ அமைப்பின் முகவர்களா? என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளதாக சிங்கள இணையத்தளம் ஒன்று தெரிவித்துள்ளது.

எதிர்வரும் உள்ளூராட்சி சபைத் தேர்தலில் கூட்டு எதிர்க்கட்சியும், ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியும் இணைந்து போட்டியிட வேண்டும் என்ற போதிலும் தனித்தனியாக போட்டியிட தூண்டியமை ஏகாதிபத்தியவாதிகளின் திட்டத்தை நிறைவேற்றுவதாகும் என சிங்கள தேசிய அமைப்புகளின் ஒன்றியம் கூறியிருந்தது.

இரண்டு தரப்பினரும் பிரிந்து தேர்தலில் போட்டியிட்டால் ஏற்படும் பகையானது எதிர்காலத்தில் நாடாளுமன்றத்தில் கொண்டு வரப்படும் புதிய அரசியலமைப்புச் சட்டத்தை தோற்கடிக்க முடியாத நிலைமையை ஏற்படுத்தும் என ஒன்றியத்தின் ஒருங்கிணைப்பாளர் வசந்த பண்டார தெரிவித்திருந்தார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சிக்குள் ஏற்பட்டுள்ள கடும் மோதலானது தற்போதைய அரசாங்கம் மற்றும் றோ அமைப்பின் தேவையாகும் எனவும் அவர் குறிப்பிட்டிருந்தார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஐக்கியப்படுவதை தடுப்பதே றோ அமைப்பின் நோக்கம் எனவும் வசந்த பண்டார தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில், கொழும்பில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து வெளியிட்ட அமைச்சர் தயாசிறி ஜயசேகர,

“சுதந்திரக்கட்சியும் கூட்டு எதிர்க்கட்சியும் இணைவதை நாடாளுமன்ற உறுப்பினர்களான நாமல் ராஜபக்ச மற்றும் பிரசன்ன ரணதுங்க ஆகியோர் எதிர்ப்பதாக கூறியிருந்தார்” என அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.