சிறுமியை கடத்திச் சென்று வன்புணர்ந்த குற்றவாளிக்கு நீதிபதி இளஞ்செழியன் கொடுத்த தீர்ப்பு

பூநகரி – நாச்சிக்குடா, வலப்பாடு என்ற இடத்தில் 12 வயதுச் சிறுமியைக் கடத்திச் சென்று வன்புணர்ந்த குற்றவாளிக்கு 10 ஆண்டுகள் கடூழியச் சிறைத் தண்டனை வழங்கி தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பான வழக்கு இன்று யாழ். மேல் நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே நீதிபதி இளஞ்செழியனால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

2010ஆம் ஆண்டு ஜூலை 26ஆம் திகதி பூநகரி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நாச்சிக்குடா, வலப்பாடு என்ற இடத்தில் 12 வயது சிறுமியை பெற்றோரின் பாதுகாப்பிலிருந்து கடத்திச் செல்லப்பட்டு வன்புணர்ந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

மேலும் செய்திகள் விளம்பரத்திற்கு கீழ் தொடரும்

இந்த நிலையில் சிறுமி வழங்கிய வாக்குமூலத்தின் அடிப்படையில் அவரது மைத்துனன் உறவு முறை கொண்ட குடும்பத்தலைவரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேகநபருக்கு எதிரான சுருக்கமுறையற்ற விசாரணை கிளிநொச்சி நீதிவான் நீதிமன்றில் நடத்தப்பட்டு, சட்டமா அதிபர் திணைக்களத்திடம் வழக்கு பாரப்படுத்தப்பட்டுள்ளது.

இதனையடுத்து சந்தேகநபரும் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். பெற்றோரின் பாதுகாப்பிலிருந்து கடத்திச் சென்றமை மற்றும் 16 வயதுக்குட்பட்ட சிறுமியை வன்புணர்ந்தமை ஆகிய குற்றச்சாட்டுக்களை சந்தேகநபருக்கு எதிராக முன்வைத்து சட்டமா அதிபர் திணைக்களத்தால் யாழ். மேல் நீதிமன்றில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.

இந்த வழக்கு யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றில் இன்று (22) விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. இதன்போது எதிரியும் பாதிக்கப்பட்ட தரப்பும் மன்றில் முன்னிலையாகியுள்ளனர்.

“எதிரி தன் மீதான குற்றச்சாட்டுக்களை ஏற்றுக்கொள்கின்றார். மதுபோதையில் அவ்வாறு நடந்து கொண்டமைக்கு இப்பொது வருத்தப்படுகிறார். அவருக்கு குறைந்தபட்ச தண்டனையை வழங்கி மன்று விடுவிக்கவேண்டும்” என்று எதிரி சார்பில் முன்னிலையான சட்டத்தரணி மன்றில் கருணை விண்ணப்பம் செய்துள்ளார்.

“எதிரி தனது குற்றத்தை தானாக முன்வந்து ஏற்றுக் கொண்டுள்ளார். அவருக்கு உச்சபட்ச தண்டனையை மன்று வழங்க வேண்டும்” என்று வழக்குத் தொடுனரான அரச சட்டவாதி நாகரட்ணம் நிஷாந்த் மன்றில் விண்ணப்பம் செய்துள்ளார்.

“எதிரி குற்றத்தை ஏற்றுக் கொண்டுள்ளார். அவரது முதலாவது குற்றமான பெற்றோரின் பாதுகாப்பிலிருந்து சிறுமியைக் கடத்திச் சென்றமைக்கு 2 ஆண்டுகள் கடூழியச் சிறைத் தண்டனை வழங்கப்படுகிறது. அத்துடன் 5000 ரூபா தண்டப் பணம் செலுத்த வேண்டும்.

அதனைச் செலுத்தத் தவறின் 2 மாதங்கள் சிறைத் தண்டனையை அனுபவிக்க நேரிடும். இரண்டாவது குற்றமான சிறுமியை வன்புணர்ந்த குற்றத்துக்கு எதிரிக்கு 10 ஆண்டுகள் கடூழியச் சிறைத் தண்டனை விதிக்கப்படுகிறது.

தண்டப் பணமாக 5 ஆயிரம் ரூபாவை செலுத்த வேண்டும். அதனைச் செலுத்தத் தவறின் மேலும் 3 மாதங்கள் சிறைத் தண்டனையை அனுபவிக்க வேண்டும். பாதிக்கப்பட்ட சிறுமிக்கு இழப்பீடாக 2 இலட்சம் ரூபா பணத்தை வழங்கவேண்டும்.

எதிரி இரண்டு வகை சிறைத் தண்டனைகளையும் ஏக காலத்தில் அனுபவிக்க வேண்டும்” என்று யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன் தீர்ப்பளித்துள்ளார்.