கோழிக்கூடுகளில் தவிக்கும் தமிழர்களின் அவல நிலை!

கோழிக்கூடுகளில் தவிக்கும் தமிழர்களின் அவல நிலை!

வன்னி மக்களுக்கு யுத்தம் தந்த பெரும் பரிசுகள் சொல்லில் அடங்காதவைகள், அதில் ஒன்றுதான் கிளிநொச்சி, வட்டக்கச்சி புதுக்காடு மாவடியம்மன் குடியிருப்பு.

யுத்தங்கள் முடிவுற்ற பின்னர் வவுனியா செட்டிக்குளம் நலன்புரி முகாமில் இருந்து வட்டக்கச்சி புதுக்காடு மாவடியம்மன் குடியிருப்புக்கு அப்பகுதி மக்கள் மீள்குடியேறினார்கள்.

அன்றிலிருந்து இன்று வரைக்கும் வீட்டுத்திட்டம், வீதிகள், மின்சாரம், மலசலகூடம் என எந்த ஒரு அடிப்படை வசதிகளும் அற்ற நிலையில் அப்பகுதி மக்கள் வாழ்ந்து வருகின்றனர்.

இந்த நிலையில், ஒரு உயர்தரப்பிரிவு மாணவி தனது கனவுகளை நிறைவேற்ற முடியாமல் போராடிக்கொண்டிருக்கின்றார். இதுதொடர்பில் அவர் கண்ணீருடன் கருத்து வெளியிட்டுள்ளார்.

விஞ்ஞான பிரிவில் படிக்கக்கூடிய நல்ல பெறுபேறுகள் இருந்தாலும் என்னால் கல்விகற்க முடியாத சூழல் உள்ளது.

எனது கிராமத்தில் நான் கல்வி கற்க கூடிய சூழல்கள் இல்லை. ஏனெனில் எங்களுக்கு வீடு இல்லை, நாங்கள் ஒரு கோழி கூட்டில் தான் வாழ்ந்து வருகிறோம்.

இவ்வாறு இருக்கும் போது எனது கல்வியை எவ்வாறு தொடர முடியும். இரவு நேரங்களில் குப்பி விளக்கில் படிக்கமுடியாது.

மழைகாலங்களில் மேலும் பல சிரமங்களை எதிர்நோக்குவோம், இதனால் எனது கல்வியை தொடரமுடியாது காணப்படுகின்றது.

இப்படித்தான் எனது கிராமத்தில் வசிப்பவர்களும் என்னைபோன்று வாழ்கிறார்கள் என்று கண்ணீருடன் கூறியுள்ளார்.

எமது புதுக்காடு மாவடியம்மன் கிராமத்துக்கு எந்த ஒரு அபிவிருத்தியும் கிடைக்கவில்லை என்றும் மக்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.

இதேவேளை, கிராம மக்களும் இது தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ளனர்.

மீள்குடியேற்றத்தின் பின்னர் நாம் இந்த இடத்திற்கு வந்த போது இந்த இடம் வனவளத் திணைக்களத்திற்கு சொந்தமானது என்று நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தபோதும் தீர்ப்பு எங்களுக்கு சாதகமாய் வழங்கப்பட்டது.

இது இவ்வாறு இருக்க நல்லாட்சி மாற்றம் பெற்ற பின்னர் 100 நாள் வேலைத்திட்டத்தினூடாக காணி உறுதிகளும் வழங்கப்பட்டும் எமக்கு எந்த ஒரு அடிப்படை வசதிகளும் செய்து தரவில்லை.

தேர்தல் காலங்களில் அரசியல்வாதிகள் வருவார்கள் உங்களுக்கு நாங்கள் அனைத்து வசதிகளும் செய்து தருகிறோம் என்று வாக்குறுதி வழங்குவார்கள்.

ஆனால், தேர்தல் காலங்கள் முடிந்தால் எம்மை திரும்பி பார்க்கமாட்டார்கள் எனவும் கவலை வெளியிட்டுள்ளனர்.

மேலும், ஒரு சிலருக்கு வாழ்வாதாரமாக கோழிக்கூடுகள் வழங்கப்பட்டன.

அந்த கோழிக்கூட்டில்தான் இப்போது வாழ்ந்து வருகிறோம். மழைக்காலங்களில் பாம்புகள், விச பூச்சிக்கள், கரடிகள், யானைகள் என பல எங்களை அச்சுறுத்தி வருகின்றன.

எனவே நாங்கள் அச்சமின்றி வாழ்வதற்கு வீடு, மின்சார வசதிகள் இருந்தால் எமக்கு பாதுகாப்பாக இருக்கும், இதற்கு உரிய தரப்பினர் நடவடிக்கை மேற்கொள்ளுமாறு அப்பகுதி மக்கள் கோரி்க்கை விடுத்துள்ளனர்.