ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் சார்பில் மாத்தளை மாவட்டத்தில் வில்கமுவ பிரதேசசபைக்கு லக்கல தேர்தல் தொகுதியில் போட்டியிடும் பௌத்த பிக்கு ஒருவர், ஆசிரியையின் வீட்டுக்குள் புகுந்து அவரை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்த முயற்சித்த போது சிக்கியுள்ளார்.

சோனுத்த விகாரையின் விகாராதிபதியான ரத்தனபால தேரர் என்ற பிக்குவே இந்த சர்ச்சையில் சிக்கியுள்ளார்.

ஆசிரியையின் கணவர் சில காலங்களுக்கு முன்னர் உயிரிழந்துள்ளதுடன் அவரது வீடு விகாரைக்கு அருகில் அமைந்துள்ளது.

சம்பவம் நடந்த தினத்தில் அதிகாலை 5.30 மணி அளவில், இந்த பிக்கு யாருக்கும் தெரியாமல் வீட்டுக்குள் புகுந்துள்ளார்.

இப்படியான நபருக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கியமை குறித்து பொதுஜன முன்னணிக்கு மக்கள் கடும் எதிர்ப்புகளை தெரிவித்து வருகின்றனர்.

அதேவேளை பொதுஜன முன்னணியின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர் உட்பட சிலர் மஹியங்கனை வைத்தியசாலையில் சேவையாற்றும் நான்கு மருத்துவர்களை தாக்கியுள்ளனர்.

மேலும், அந்த கட்சியை சேர்ந்த கடுவலை மாநகர சபைக்கு போட்டியிடும் வேட்பாளர் ஒருவர் தனது தாய் மற்றும் மாமனாரின் தலையில் துப்பாக்கியை வைத்து கொலை அச்சுறுத்தல் விடுத்துள்ளார்.

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் சார்பில் கடந்த காலத்தில் உள்ளூராட்சி சபைகளில் அங்கம் வகித்த உறுப்பினர்கள், தலைவர்கள் எனப் பெரும்பாலானவர்கள் இம்முறை ஜீ.எல்.பீரிஸ் தலைமையிலான ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் சார்பில் தேர்தலில் போட்டியிடுகின்றனர்.

இவர்களில் அதிகமானோர் பல்வேறு குற்றச்சாட்டுக்களை எதிர்நோக்கிய நபர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.