அரசியல் முரண்பாடுகளை பிரதிபலிக்கும் தேர்தல்!

அரசியல் முரண்பாடுகளை பிரதிபலிக்கும் தேர்தல்!

வடக்கு, கிழக்கில் தமிழ் மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் பிரதான அரசியல் அணியாக விளங்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அண்மைக்கால அணுகுமுறைகளையும் செயற்பாடுகளையும் கடுமையாக எதிர்க்கும் அரசியல் போக்கை முன்னெடுத்த தீவிர தேசியவாதச் சக்திகள் இப்போது பிளவுபட்டு நிற்பதைக் காணக்கூடியதாக இருக்கிறது.election-northern-provencei

இந்த தீவிர தமிழ்த் தேசியவாத அரசியல் சக்திகளின் பிரதான அங்கங்களாக விளங்கிய இரு கட்சிகள் வெவ்வேறு திசைகளில் சென்று புதிய தேர்தல் கூட்டணிகளை அமைத்திருக்கின்றன.

அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சியின் தலைமையில் அமைந்த தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலமும் ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி( ஈ.பி.ஆர்.எல்.எவ்.)யின் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரனும் தமிழ்த் தேசியவாத இலட்சியத்தை முன்னெடுப்பதற்கெனக் கூறிக்கொண்டு இரு வருடங்களுக்கு முன்னர் சிவில் சமூக அமைப்பு என்ற பெயரில் ‘தமிழ் மக்கள் பேரவை’ அமைக்கப்படுவதற்கு முன்னெடுக்கப்பட்ட பணிகளில் முன்னணிப் பாத்திரங்களை வகித்தவர்கள்.

அவர்கள் இருவரினதும் தீவிர பங்கேற்பும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வடமாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரனின் ஆதரவைப் பெற்றுக்கொள்வதில் இருவருக்கும் இருந்த ஆற்றலும்தான் தமிழ் மக்கள் பேரவை மீது மக்களினதும் அரசியல் சமூகத்தினதும் கவனத்தை ஈர்க்கச் செய்தன என்பதில் சந்தேகமில்லை.

கஜேந்திரகுமாரும் சுரேஷ் பிரேமச்சந்திரனும் வெவ்வேறு கூட்டணிகளை அமைத்துக்கொண்டு வெவ்வேறு சின்னங்களின் கீழ் தங்கள் வேட்பாளர்களை நிறுத்தி உள்ளூராட்சி தேர்தல் பிரசாரங்களை முன்னெடுத்திருக்கும் பின்புலத்தில் முக்கியமானதொரு கேள்வி தவிர்க்கமுடியாமல் எழுகிறது ; தமிழ் மக்கள் பேரவையின் நிலை என்ன?

சில வாரங்களுக்கு முன்னர் யாழ்நகரில் நடைபெற்ற தமிழ் மக்கள் பேரவையின் கூட்டமொன்றில் அதன் இணைத்தலைவரான முதலமைச்சரின் முன்னிலையில் கஜேந்திரகுமாரும் பிரேமச்சந்திரனும் உள்ளூராட்சி தேர்தல்களில் போட்டியிடுவதற்காக புதியதொரு கூட்டணியை அமைப்பது குறித்து யோசனை முன்வைத்தார்கள்.

அரசியலமைப்புச் சபையின் இடைக்கால அறிக்கை தொடர்பில் வடக்கு,கிழக்கு தமிழ் மக்களின் நிலைப்பாட்டை அறிந்துகொள்வதற்கான களமாகவும் உள்ளூராட்சி தேர்தல்களைப் பயன்படுத்தவேண்டிய தேவை குறித்தும் இருவரும் கருத்து வெளியிட்டார்கள்.

அரசியல் கட்சியாக தமிழ்மக்கள் பேரவை மாறாது என்று தனக்கு உத்தரவாதம் அளிக்கப்பட்டதையடுத்தே அதன் இணைத் தலைவர் பதவியை ஏறுறுக்கொள்ள இணங்கியதாக நெடுகவும் கூறிவந்த முதலமைச்சர் விக்னேஸ்வரன், தன்முன்னிலையிலேயே அதே பேரவையின் கூட்டத்தில் புதிய அரசியல் ( தேர்தல்) கூட்டணி அமைப்பது குறித்து அரசியல்வாதிகள் பேசுவதற்கு எவ்வாறு அனுமதிக்கமுடியும் என்ற விமர்சனங்கள் எழுந்தன.

செய்தியாளர்களிடம் அந்த விமர்சனத்துக்கு பதிலளித்த முதலமைச்சர், தமிழ் மக்கள் பேரவையின் இலட்சியங்களுக்கும் இலக்குகளுக்கும் இசைவான முறையில் செயற்படக்கூடிய அணியொன்றை தேர்தலில் ஆதரிப்பதில் பிரச்சினையில்லை என்று கூறினார்.

ஆனால், பேரவையின் அந்தக் கூட்டம் நடைபெற்ற சில தினங்களுக்குள்ளாகவே தேர்தல் தந்திரோபாயங்கள் தொடர்பில் கஜேந்திரகுமாருக்கும் சுரேஷ் பிரேமச்சந்திரனுக்கும் இடையே முரண்பாடுகள் முற்றிவிட்டன.

விட்டுக்கொடுப்புகளுக்கு விரும்பாத கோட்பாட்டுப் பிடிவாதமுடைய தமிழ்த் தேசியவாதியாக தன்னை முன்னிறுத்துவதில் கஜேந்திரகுமார் அக்கறை காட்டுகின்ற அதேவேளை, தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு கடுமையான சவாலை தேர்தலில் தோற்றுவிக்கவேண்டுமென்றால் பிரபல்யமான ஒரு சின்னத்தின் கீழ் போட்டியிடவேண்டுமென்று பிரேமச்சந்திரன் வாதாடினார்.

கஜேந்திரகுமாரின் தமிழ் காங்கிரஸின் சைக்கிள் சின்னத்தில் போட்டியிடுவதற்கு சுரேஷ் பிரேமச்சந்திரன் தயாராயில்லை.பிரேமச்சந்திரனின் கட்சியின் சின்னத்தில் போட்டியிடுவதற்கு கஜேந்திரகுமார் இணங்கமாட்டார் என்பது எல்லோருக்கும் தெரியும்.

இறுதியில் மூத்த அரசியல்வாதி வீரசிங்கம் ஆனந்தசங்கரி தலைமையிலான தமிழர் விடுதலை கூட்டணியின் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடக்கூடியதாக தேர்தல் கூட்டணியொன்றை சுரேஷ் பிரேமச்சந்திரன் அமைத்துக்கொண்டார்.

மக்கள் மத்தியில் பிரபல்யமான சின்னத்தில் போட்டியிட்டால்தான் கூட்டமைப்புக்குச் சவாலை தோற்றுவிக்கமுடியுமென்ற வாதம் உண்மையில் தமிழ் மக்களின் விவேகத்தை நிந்தனை செய்வதாக இருக்கிறது. அயல்நாட்டின் நிகழ்ச்சி நிரலுக்கு இசைவான அரசியலை பிரேமச்சந்திரன் முன்னெடுக்கிறார் என்று வெளிப்படையாகவே குற்றஞ்சாட்டுவதற்கு கஜேந்திரகுமார் தயங்கவில்லை.

தமிழ் மக்கள் பேரவையின் உருவாக்கத்தின் அரசியல் கருவிகளாகச் செயற்பட்ட இவர்கள் இருவரும் உள்ளூராட்சி தேர்தல்களுக்காக வெவ்வேறு திசைகளில் சென்று பிரசாரங்களை முன்னெடுத்திருக்கும் நிலையில் பேரவை இனிமேலும் செயற்பட முடியுமா என்ற கேள்வி எழுகிறது.

உள்ளூராட்சி.தேர்தல்கள் தொடர்பில் நிலைப்பாட்டை தமிழ் மக்கள் முன்னிலையில் வைக்க பேரவை ஒரு கூட்டத்தைக் கூட்டுமா?தங்களது முரண்பாடான தேர்தல் வியூகங்களை ஒருபுறம் ஒதுக்கிவிட்டு எதிர்காலத்தில் கஜேந்திரகுமாரும் பிரேமச்சந்திரனும் பேரவையின் செயற்பாடுகளில் பங்கேற்கக்கூடிய அரசியல் முதிர்ச்சியை வெளிக்காட்டுவார்களா? முதலமைச்சர் தனது இணைத் தலைமையிலான பேரவையின் தற்போதைய நிலை என்ன என்பதை தமிழ் மக்களுக்கு கூற முன்வருவாரா?

இதனிடையே தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குள் உள்ளுராட்சித் தேர்தல்களுக்காக ஆசனப்பங்கீடு தொடர்பில் முரண்டாடுகள் தொடர்ந்தவண்ணமேயிருந்தன  என்பது தமிழர் அரசியலின் இன்னொரு பக்கக் கேலிக்கூத்து!