அமைச்சரவைக் கூட்டத்தில் இருந்து சிறிலங்கா அதிபர் வெளிநடப்பு – முற்றுகிறது முறுகல்

அமைச்சரவைக் கூட்டத்தில் இருந்து சிறிலங்கா அதிபர் வெளிநடப்பு – முற்றுகிறது முறுகல்

maithri

இன்று காலை நடந்த அமைச்சரவைக் கூட்டத்தில் இருந்து சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன வெளிநடப்புச் செய்தார் என்று சிறிலங்கா அமைச்சர் ஒருவரை மேற்கோள்காட்டி ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

‘அமைச்சரவை இன்று காலை கூடிய போது, சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன தனக்கு எதிராக ஐக்கிய தேசியக் கட்சியின் குறிப்பிட்ட சில உறுப்பினர்கள் தனிப்பட்ட முறையில் தாக்குதல்களை முன்னெடுப்பதாக உணர்வுபூர்வமாக சுமார் அரைமணி நேரம் உரையாற்றினார்.

இதன்போது, தம்மை விமர்சிக்கும் ஐதேக உறுப்பினர்கள் சிலரது பெயர்களையும் குறிப்பிட்டு அவர் உரையாற்றியிருந்தார். இதையடுத்து மனவேதனையுடன் அமைச்சரவைக் கூட்டத்தை விட்டு வெளியேறினார்.

எனினும், சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும், ஏனைய அமைச்சர்களும், சிறிலங்கா அதிபருடன் பேச்சு நடத்தி, அவரை சமாதானப்படுத்தி, அமைச்சரவைக் கூட்டத்துக்கு அழைத்து வந்தனர்.

அதன் பின்னர் சுமார் ஒன்றரை மணிநேரம் அமைச்சரவைக் கூட்டம் சுமுகமாக நடைபெற்றதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மைத்திரிக்கு எதிராக அதிகரிக்கும் குரல்கள்

இதற்கிடையே, சிறிலங்கா அதிபருக்கு எதிராக அமைச்சர் சுஜீவ சேனசிங்க, நாடாளுமன்ற உறுப்பினர் மரிக்கார் ஆகியோர் காட்டமான விமர்சனங்களை தெரிவித்திருந்தனர்.

இந்த நிலையில், தங்காலையில் இன்று நடந்த நிகழ்வு ஒன்றில் உரையாற்றிய இராஜாங்க அமைச்சர் திலிப் வெதஆராச்சி, அரசாங்கத்தை தூய்மைப்படுத்துவது பற்றிப் பேசும் சிறிலங்கா அதிபர் முதலில் தமது கட்சியைத் தூய்மைப்படுத்த வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

ஐதேகவினால் தான் இன்று சிறிலங்கா அதிபர் பதவியில் மைத்திரிபால சிறிசேன இருக்கிறார் என்றும், தொடர்ச்சியான அழுத்தங்கள் பிரயோகிக்கப்பட்டால் ஐதேக தனித்து ஆட்சியமைக்கும் என்றும் அவர் கூறியுள்ளார்.